அரசியல்தமிழ்நாடு

ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் நியாயமான கோரிக்கை – பிரவீன் சக்கரவர்த்தி

கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. இதன் காரணமாகக் கட்சி தொடர்ந்து பலவீனமடைந்து கொண்டே செல்கிறது. எனவே, கட்சியைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தல்களில் அதிக இடங்கள், ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதுதான் அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இது கட்சியின் எதிர்கால நலனுக்காக வைக்கப்படும் கோரிக்கையே தவிர இதில் எந்தத் தவறும் இல்லை.

சில நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். தொகுதிப் பணிகள் அல்லது வழக்குகள் நிமித்தமாக அவர்கள் அமைதி காக்கலாம். “ஊட்டிவிடும் கையை யாராவது கிள்ளுவார்களா?” என்ற ரீதியில் அவர்கள் செயல்படலாம்.

ஆனால், ஒரு சாதாரணத் தொண்டனுக்கு கட்சியின் எதிர்காலமே முக்கியம். கூட்டணிகுறித்து கட்சித் தலைமைதான் இறுதி முடிவெடுக்கும் என்றாலும், ஜனநாயக ரீதியாகத் தொண்டர்கள் தங்கள் விருப்பத்தைக் கூற முழு உரிமை உண்டு. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை நான் சந்தித்தது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

டெல்லியில் நான் பல தலைவர்களைச் சந்திக்கிறேன், அதுபோலவே இதுவும் ஒரு தனிப்பட்ட சந்திப்புதான். விஜய் ஒரு சக்தியாகத் தமிழகத்தில் உருவெடுத்துள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவரது கூட்டங்களுக்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர். மக்கள் அவரை ஒரு நடிகராகப் பார்க்காமல், ஒரு அரசியல்வாதியாகவே பார்க்கின்றனர்.

அந்த ஆர்வம் மக்களிடம் தெரிகிறது. அந்த ஆதரவு வாக்குகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு – இந்த மூன்றும்தான் காங்கிரஸ் தொண்டர்களின் இன்றைய கோரிக்கை.

தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற இதுவே சரியான வழி. நாம் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று சீமான் உள்ளிட்ட மற்றவர்கள் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!