கோவையில் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
காலமுறை ஊதியம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும், அகவிலை படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு முழுவதும் பணியைப் புறக்கணித்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் சுமார் 1500 அங்கன் வாடிச் சத்துணவு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டதோடு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே அமர்ந்து கண்டன கோசங்களை எழுப்பினர். உடனடியாக அரசு அங்கன்வாடி ஊழியர்களை அழைத்துப் பேசிக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்ட தலைவர் சாந்தி கூறியதாவது: காலமுறை ஊதியத்துடன் அரசு ஊழியராக்க வேண்டும், அகவிலை படியுடன் கூடிய ஓய்வூதியம், பணிக் கொடை வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எஸ்.ஐ.ஆர் போன்ற பணிகளுக்கு அனுப்புவதால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
முதல்வர் உறுதியளித்த வாக்குறுதியதை தான் வலியுறுத்துகிறோம். இன்று முதல்வரின் கவனத்தை ஈர்க்க அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம், வரும் 30 தேதி சென்னையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. அப்போது முதல்வர் கோரிக்கைகள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிப்.3 முதல் எந்தப் பணியும் செய்யப் போவதில்லை என்றார்.