கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்தும் கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதோடு, அந்த நாட்டின் அதிபரையும் அமெரிக்கா கைது செய்துள்ளது. சர்வதேவ சட்டங்களை மீறிய அமெரிக்காவை கண்டித்து உலகம் முழுவதும் ஜனநாயாக அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமெரிக்கா மற்றும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் துணைத் தலைவர் கோபால் சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில பொருளாளர் மாசேதுங், செல்வம், வேலுச்சாமி, சிவில் உரிமை கழகம் தேசிய செயலாளர் பாலமுருகன், வழக்கறிஞர் வெண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பேசிய வழக்கறிஞர்கள் கூறும்போது : அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறி வருகிறது. இன்று வெனிசுலா நாட்டிற்கு ஏற்பட்ட இதே நிலையில் நாளை இந்தியா போன்ற நாடுகளுக்கும் நடக்கும். இதனை உடனடியாக இந்திய அரசும் கண்டிக்க வேண்டும் என்றனர்.