திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் – வானதி சீனிவாசன்
தீபத் தூணைச் சர்வேவே கல் என்ற கொச்சைப்படுத்திய திமுக தலைவர்கள் முருக பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
“சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்” என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பொது அமைதிக்கு பிரச்னை ஏற்பட தமிழ்நாடு அரசே காரணம். தீபத் தூண் விவகாரத்தில் அரசியல் காரணங்களோடு தமிழக அரசு செயல்பட்டுள்ளது. தீபத் தூண் தேவஸ்தான இடத்திலேயே உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூண்தான். எனவே, தனி நீதிபதி உத்தரவுப்படி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். இதை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்” என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி.
இந்தத் தீர்ப்பைத் தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் செயல்படுத்த வேண்டும். மலை உச்சியில் உள்ள தீபத் தூணைச் சர்வே கல் என்று, இந்துக்களின் மத உணர்வைக் கொச்சைப்படுத்திய திமுக அரசும், திமுக தலைவர்களும் முருக பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சிறுபான்மையினரின் வாக்குகளை மொத்த அறுவடை செய்ய, இந்துக்களின் மத நம்பிக்கைகள், உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.