அரசியல்தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் – தொல். திருமாவளவன்

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, திருத்தணி ரயில் நிலையம் அருகே அரிவாளால் சிறார்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையில் சிறார்கள், அந்த இளைஞரைப் பட்டாகத்தி கொண்டு கொடூரமாகத் தாக்கி இதுதொடர்பான வீடியோவையும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவிப் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்பற்றி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் நேற்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில்,

“ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை ‘ரீல்ஸ்’ என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!