செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மறுத்த புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொலை – இருவர் கைது!
கோவையில் மேற்குவங்க புலம்பெயர் தொழிலாளியை அடித்துக் கொன்ற ஆட்டோ ஓட்டுனர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ் (22). இவர் கோவையில் தங்கி தனியார் உணவகத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுராஜ் கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே தனது நண்பர் ராகெத் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பயணிகள் ஆட்டோவை ஓட்டி வந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த பஜித்கான் (30). வேகமாக வந்து சுராஜ் மீது ஆட்டோ மோதியுள்ளார். இதில் கீழே விழுந்த சுராஜ் லேசான காயமடைந்தார்.
பின்னர் இதுகுறித்து சுராஜ், பஜித்கானிடம் கேட்டபோது இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பஜித்கானின் நண்பரான பிரகாஷ் என்பவருடன் சேர்ந்து சுராஜ் மற்றும் ராகெத்தை மிரட்டியுள்ளனர்.
மேலும் அப்போது சுராஜை மன்னிப்பு கேட்க வேண்டும் பஜித்கான் கூறியுள்ளார். ஆனால் தன் மீது தவறு இல்லை, மன்னிப்பு கேட்க முடியாது எனச் சுராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பஜித்கான் சுராஜை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி சுராஜ் விழுந்த நிலையில் பஜித்கான், பிரகாஷ் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மேலும் சுராஜை தாக்குவது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவிக்க அவரது நண்பர் ராகெத் சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்றவர்கள் சுராஜை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுராஜ் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெரியகடைவீதி போலீசார் வழக்குப் பதிவு செய்து பஜித்கான் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மறுத்த மேற்குவங்க புலம்பெயர் தொழிலாளியை ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.