பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ணமயமாக தயாராகும் பானைகள்..!
தமிழர் பண்டிகையான பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் வரும் ஜன.15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தக் கொண்டாடத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகளும் தயாராகி வருகின்றனர். ஆரம்பத்தில் பொங்கல் விழா கிராமங்களில் மண்பானை கொண்டு பொங்கல் வைத்துச் சூரியனை வழிபடுவது, கால்நடைகளை வழிபடுவது எனக் கொண்டாடப்பட்டது. மேலும் நகர பகுதியில் வீட்டில் உள்ள சமையல் எரிவாயு மூலம் சில்வர் பாத்திரங்களில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். காலப்போக்கில் நகர் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் மண்பானைகளில் பொங்கல் வைத்துக் கரும்பு, மஞ்சள் கட்டி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் மண் பானை விற்பனையும் அதிகளவு நடக்க துவங்கியது.

அதே போல இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மண்பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்குத் தயாரிக்கும் மண்பானைகள் கோவை மாநகர் பகுதிகளுக்கு மட்டும் அல்லாமல் திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய மண்பானை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை தயாரிக்கும் பணிகள் வேகமாகச் செய்து வருகிறோம். இங்குக் கால் அடி முதல் 3 அடிவரை மண்பானைகளை தயாரித்து வருகிறோம். மேலும் முதல் நாள் பானை செய்து காய வைப்போம், இரண்டாம் நாள் அதனைத் தட்டி தயார் செய்வோம், தொடர்ந்து சுமார் 100 முதல் 200 பானைகள் சேர்ந்த பின் அதனைச் சுட வைத்து விற்பனைக்குத் தயார் செய்கிறோம்.

மேலும் மண்பானைகளை தயாரித்தாலும் அதனை வைத்து விற்பனை செய்ய ஏதுவான இடம் இல்லை, எனவே எதாவது ஒரு இடத்தை அரசு விற்பனைக்குப் பயன்படுத்தக் கொடுக்க வேண்டும். அதே போலத் தற்போது மண்பானை செய்யப் போதுமான அளவு மண் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இதனால் பானைகள் தயாரிக்கும் பணிகளில் சற்று தொய்வு ஏற்படுகிறது. கடந்த காலங்களில் இல்லாதவாறு மண்பானைகளில் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது மகிழ்ச்சி தான் என்றனர்.