கோவையில் தாயை பிரிந்த கருஞ்சிறுத்தை குட்டி: தாயுடன் சேர்க்கும் பணி தீவிரம்
கோவை மருதமலை குடியிருப்பு அருகே கண்டறியப்பட்ட கருஞ்சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை லெப்ரஸ் காலனி அருகே உள்ள குடியிருப்பில் காலைக் கருஞ்சிறுத்தை குட்டி ஒன்று தனியாக உலா வந்தது. முதலில் அதனைப் பூனையெனக் கருதிய மக்கள் நன்றாகப் பார்த்தபோது அது கருஞ்சிறுத்தை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அக்குடியிருப்பில் சேர்ந்த மக்கள் கோவை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தனியாகச் சுற்றி திரிந்த கருஞ்சிறுத்தை குட்டியைப் பத்திரமாக மீட்டு கூண்டில் அடைத்தனர்.
தொடர்ந்து அதே பகுதியில் கருஞ்சிறுத்தை குட்டியின் தாயும் சுற்றி வரும் பகுதி என்பதால், அதே வனப்பகுதியில் குட்டியைத் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தாயுடன் குட்டியைச் சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்தால் அதனைச் சென்னை வண்டலூர் பூங்காவிற்கு அனுப்பி வைக்க வாய்ப்பு உள்ளது.