கோவை நீலம்பூரில் புதிய காவல் நிலையம் திறப்பு!
கோவை மாநகர எல்லையோரப் பகுதிகளில் அதிகரித்துள்ள மக்கள் தொகை அடர்த்தி மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்புக்காக நீலம்பூர் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வழியாகத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை மேற்கு மண்டல இயக்குநர் செந்தில்குமார், கோவை சரக காவல் துணைத் தலைவர் V. சசிமோகன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. கார்த்திகேயன், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வராகவன் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் புதிய காவல் நிலையம் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 19 காவலர்கள் என மொத்தம் 20 பணியாளர்களுடன் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். முழுமையாக இயங்கும்போது இக்காவல் நிலையத்தில் ஒரு காவல் ஆய்வாளர், மூன்று உதவி ஆய்வாளர்கள் மற்றும் 46 காவலர்கள் என மொத்தம் 50 பணியிடங்கள் இருக்கும்.
நீலம்பூர் காவல் நிலையம் முத்துகவுண்டன் புதூர், நீலம்பூர், ராசிபாளையம், மயிலம்பட்டி, அரசூர், வெள்ளணைப்பட்டி, நாரணபுரம், பச்சாபாளையம் ஆகிய 8 தாய்கிராமங்கள் மற்றும் 23 துணை குக்கிராமங்களை உள்ளடக்கிச் செயல்படும். இந்தப் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டதன் மூலம், இப்பகுதி மக்கள் தங்கள் புகார்களை மிக அருகிலேயே பதிவு செய்து விரைவான நிவாரணம் பெறும் வசதி கிடைத்துள்ளது.
மேலும், குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும், சட்டம் – ஒழுங்கை வலுப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவும். ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பு மற்றும் உதவி வழங்கும் வகையில் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்தக் காவல் நிலையம் செயல்படும் என்று கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.