பள்ளி மாணவி தற்கொலை – ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த முத்து சஞ்சனா, ரொட்டிக்கடை அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். மூன்று ஆசிரியர்களின் மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்பட்டு, கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தற்கொலைக்கு முயன்றார். தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி, புதன்கிழமை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் குடும்பத்தினர் அவர் உயிரிழப்பதற்கு முன் பதிவு செய்த வீடியோ வாக்குமூலத்தை வெளியிட்டனர். அதில், ஆங்கில ஆசிரியை தனது தோற்றத்தை ஒரு வாரம் கேலி செய்ததாகவும், நல்ல கல்வித் திறன் இருந்தபோதிலும் தன்னை மெதுவாகக் கற்கும் மாணவர்களுடன் சேர்த்ததாகவும் மாணவி குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், தமிழ் மற்றும் அறிவியல் ஆசிரியர்களின் துன்புறுத்தலும் தனது இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியானதையடுத்து, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில், அவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரியர்கள் கொடுக்கும் விளக்கங்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.