பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளி – உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட திருநாவுக்கரசு, தண்டனையை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹெரான் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மே 13ஆம் தேதி வெளியானது. இதில் 9 பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு என்பவர் தீர்ப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் தீர்ப்பு வெளியாகி 60 நாட்களுக்குள் மனுத்தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், தாமதமானது குறித்தும் ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் வழங்கி உள்ளார். இதுகுறித்து சிபிஐ தரப்பிலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.