ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை – இறப்பிற்கு முன் மாணவி வாக்குமூலம்
கோவை வால்பாறையில் ஆசிரியர்கள் திட்டியதால் உடலில் தீ வைத்துக் கொண்ட 9 ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 3 ஆசியர்கள்மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சிறுமியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சக்திவேல் குமரன். இவரது மூத்த மகள் முத்து சஞ்சனா ரெட்டிக்கடை பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த அக்.10 ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி முத்து சஞ்சனா உடலில் மண்ணென்னை ஊற்றித் தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 40 நாட்களுக்கும் மேலாகச் சிகிச்சையில் இருந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவி வாக்குமூலம்
மாணவி தான் தற்கொலைக்கு முயன்றது குறித்து வாக்குமூலம் ஒன்று அளித்துள்ளார். அதில் தான் படிக்கும் பள்ளியில் பணியாற்றி வரும் அறிவியல் ஆசிரியர் சிந்தியா, தமிழ் ஆசிரியர் ராணிபாய், ஆங்கில ஆசிரியர் சியாமளா தேவி ஆகிரயோர் சக மாணவர்கள் முன்பு திட்டியதால் மன உலைச்சலில் இருந்ததாகவும், இதனால் தற்கொலைக்கு முயன்றாதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த மாணவி முத்து சஞ்சனா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வழக்குப்பதிவு
இதனால் மகளைத் தற்கொலைக்குத் தூண்டிய ஆசிரியர்கள்மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி பெற்றோர் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் மாணவியின் பெற்றோர், மாதர் சங்கத்தினர், மாணவர் அமைப்பினர் மனு அளித்தனர்.