மெட்ரோ திட்டத்திற்கான உரிய அனுமதி வழங்கக்கோரி DYFI ஆர்ப்பாட்டம்!
கோவை, மதுரை மாவட்டங்களுக்கான மெட்ரோ திட்டத்திற்கான உரிய அனுமதி வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு மெட்ரோ திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. மேலும் அவை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 20 லட்சம் மக்கள் தொகைக்குக் குறைவாக உள்ளதால் அந்த அறிக்கையை ஒன்றிய அரசு மீண்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளது.
இதற்குப் பல்வேறு அரசியல் இயக்கங்கள் அமைப்புகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வரும் நிலையில், உடனடியாகக் கோவை மற்றும் மதுரை மாவட்டங்களுக்கான மெட்ரோ திட்டத்திற்கு உரிய அனுமதி வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, துணைச் செயலாளர் விக்னேஷ் உள்ளிட்ட அச்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
அப்போது வளர்ச்சி அடைந்த கோவை மாவட்டத்திற்கு மெட்ரோ திட்டத்தைக் கொண்டு வராத ஒன்றிய பாஜக அரசு, பாஜக ஆளும் மாநிலங்களான ஆக்ரா, நாக்பூர், பூனே, இந்தூர், சூரத் ஆகிய நகரங்களில் குறைவான மக்கள் தொகை இருந்தாலும் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. மேலும் வேண்டுமென்றே தமிழகத்தை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிப்பதாகக் கூறி கண்டன கோசங்களை எழுப்பினர்.