பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஜேக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கோவையில் ஜேக்டோ ஜியோ அமைப்பு அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் ஜேக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம், பொள்ளாச்சி உள்ளிட்ட 6 வட்டங்களில் நடைபெற்ற அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஜேக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் ச.ஜெகநாதன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ப.செந்தில்குமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தற்போதைய தமிழக அரசுத் தேர்தல் காலத்தில் கொடுத்த இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திக் கண்டன கோசங்களை எழுப்பினர்.