சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: வாக்குச் சாவடி முகவர்கள் பணியைப் புறக்கணிப்பு
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் போதிய கால அவகாசம் கொடுக்கப்படாததை கண்டித்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் பணியைப் புறக்கணித்ததால், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் பாதிப்படைந்துள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் பல்வேறு குழப்பங்கள், குளறுபடிகள் உள்ளதால் வாக்குரிமை பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இந்நிலையில் போதிய கால அவகாசம், பயிற்சிகளை வழங்காமல் கடுமையாக நெருக்கடி மற்றும் பணிச் சுமையை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழகம் முழுவதும், வருவாய் ஊழியர்கள் உள்ளிட்ட வாக்குச் சாவடி முகவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 10 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் எஸ்.ஐ.ஆர் பணிகளைப் புறகணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய வாக்குச் சாவடி முகவர்கள் கூறும்போது : தற்போது அவசரகதியில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளால், கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதோடு பணிச் சுமையைக் கொடுக்கின்றனர்.
போதிய பயிற்சியையும் வழங்கவில்லை. இதனால் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் போது படிவங்களைக் கிழித்து எங்கள் முகத்தில் எரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே போல இதில் கேட்கப்படும் கேள்விகளை மக்களுக்கு விவரங்கள் தெரியவில்லை. தினமும் சுமார் 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஊழியர்கள் விபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்கள், சில மாநிலங்களில் தற்கொலை சம்பவமும் நடைபெற்றுவிட்டது. இங்குள்ள ஊழியர்களும் வேலை விட்டுப் போய் விடலாமா என்று நினைக்கும் அளவிற்கான நெருக்கடி உள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையரை சந்தித்து முறையிட்டோம், உடனடியாக ஆட்சியரை அழைத்துப் பேசுவதாகக் கூறினார், ஆனால் முறையிட்டதிற்கு பிறகு கூடுதல் நெருக்கடியைக் கொடுக்கின்றனர் என்றார்.