கோவையில் காட்டு யானைகள் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வைரல்!
கோவை தடாகம் அருகே உள்ள விவசாய தோட்டத்திற்குள் நள்ளிரவு வந்த காட்டு யானைகள் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவை தடாகம் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் தடாகம் அருகே உள்ள வீரபாண்டி, வரப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளைப் பொருட்களைச் சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தடாகம் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் ஒன்று வரப் பாளையம் பகுதியில் உள்ள மனோகர் என்பவரது விவசாய தோட்டத்திற்குள் உணவு தேடி புகுந்தது. அப்போது அதில் இரண்டு ஆண் யானைகள் தோட்டத்திற்குள் நின்று ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு மோதிக்கொண்டது. இறுதியில் யானைகள் அங்கிருந்து வெளியே சென்றது.
இந்நிலையில் விவசாய தோட்டத்திற்குள் யானைகள் கூட்டம் வந்து, அதில் இரண்டு யானைகள் மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அடிக்கடி காட்டு யானைகள் விவசாய தோட்டத்திற்குள் வருவதால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், யானைகள் விளைநிலங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும் என விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.