கோவை அரசுத் தொழில்நுட்ப கல்லூரிக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ்!
கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி விடுதி சமையல் அறையில் உள்ள சுகாதார சீர்கேடுகளைச் சரி செய்து, புகைப்படத்துடன் பதிலளிக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசிதிகள் இல்லையென மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் கல்லூரி விடுதி உணவகத்தில் வழங்கப்படும் உணவில் பூச்சிகள், தூசிகள் இருப்பதாகவும், மிகவும் சுகாதார குறைபாடுகளுடன் இருப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக மாணவ, மாணவிகள் புகைப்படங்களை வெளியிட்டனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவிய தகவல் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள், தடாகம் சாலையில் உள்ள அரசுத் தொழில் நுட்ப கல்லூரி விடுதி சமையலறையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையல் அறையில் சுகாதாரமற்ற முறையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த ஊழியர்களை உடனடியாகச் சீர் செய்ய உத்தரவிட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், முறையாக அனைத்தையும் சீர் செய்து 15 நாட்களுக்குள் புகைப்படத்துடன் அறிக்கையாக வழங்க வேண்டும் எனக் கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.