கோவையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர் கைது!
கோவை தொண்டாமுத்தூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை தொண்டாமுத்தூர், ஆண்டிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பேரூர் தனிப்பிரிவு காவலர் சுரேஷ் கோபி மற்றும் வருண் காந்தி ஆகியோர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள வீட்டில் கள்ளச்சாராயம் வாங்குவது போல் சென்று அங்கிருந்து நபரை மடக்கி போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் தொண்டாமுத்தூர் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பேச்சியண்ணன் மகன் ராஜசேகர் (48) என்பதும், வெல்டிங் வேலை செய்து வரும் இவர், தனது சொந்தப் பயன்பாட்டிற்காக வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து தனக்கு நன்கு தெரிந்தவர்கள் கேட்டால் அவர்களுக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சாராயத்தை லிட்டர் தலா ரூ.600 விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10.25 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ராஜசேகர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை மதுவிலக்கு பிரிவு போலீஸிடம் ஒப்படைத்தனர். படம் – கள்ளச்சாரம் காய்ச்சி கைதான ராஜசேகர்.