நாடாளுமன்ற உறுப்பினர் என்ன செய்கிறார்? கல்லூரி மாணவர்களுக்கு ஒர் இன்டர்ன்ஷிப்
தமிழ்நாட்டில் முதல்முறையாகக் கோவை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கல்லூரி மாணவ, மாணவிகள் 30 நாட்கள் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பணி மற்றும் பொறுப்புகுறித்து அறிந்து கொள்ள, கோவையைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 11 மாணவ, மாணவிகள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாரிடம் 30 நாட்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
தன்னார்வ அமைப்புமூலம் மாணவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு, கோவையைச் சேர்ந்த 180 மாணவர்கள் இந்த இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் பயிற்சிக்கு வருவதற்கான நோக்கம்குறித்து மாணவர்களிடம் கட்டுரைகள் கேட்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 11 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 30 நாட்கள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருடன் பயணிக்க உள்ளனர்.
அவரது பணி மற்றும் களஆய்வு ஆகியவற்றை நேரில் பார்த்துக் கற்று அறிவதோடு, அரசியல் மற்றும் அரசு சார்ந்த பொது அறிவு மாணவர்கள் பெற உள்ளனர்.
இறுதியாக டெல்லியில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரின்போது, அனுமதி பெற்று 11 மாணவ மாணவிகளும் நாடாளுமன்ற கூட்டத் தொடரைக் காண ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கூறும்போது: தமிழ்நாட்டிலேயே முதல்முறையாகக் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினருடன் 30 நாட்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி மக்கள் பணி செய்கிறார். கள ஆய்வு ஆகியவற்றை நேரில் பார்க்க உள்ளனர். இந்தப் பயிற்சிக்கான நோக்கம் இளைய தலைமுறையினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பற்றியும், அவரது பொறுப்புக்கள், என்ன எந்தெந்த விஷயங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுக வேண்டும் போன்ற விவரங்கள் தெரிவதில்லை.
சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் இளைஞர்கள், தேர்தல் நேரங்களில் வாக்களிக்கக் கூட வருவதில்லை. இம்மாதிரியான இன்டர்ன்ஷிப் பயிற்சிகள்மூலம் இளம் தலைமுறையினர் பல்வேறு விஷயங்களைக் கற்று அறிய முடியும் என்றார்.