கோவையில் அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு!
கோவையில் பிரச்சார சுற்றுப்பயணம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக மாநகர் மற்றும் புறநகர் காவல் நிலையங்களில் அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கோவை தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு தொகுதிகளிலும், அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அக்கட்சித் தொண்டர்கள் எந்த அனுமதியுமின்றி பிரதான சாலைகள், மற்றும் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்தனர்.
இந்த நிலையில் எந்த அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறாகப் பிளக்ஸ் பேனர் வைத்ததாக அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகளின் மீது தொண்டாமுத்தூர், பேரூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் மாநகர் பகுதியில் குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் தலா ஐந்து வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.