கோவையில் மாநில அளவிலான வாள்வீச்சு போட்டி: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கோவையில் தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான வாள்வீச்சு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் (Fencing) எனும் வாள்வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ, மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக வாள் வீச்சு போட்டிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கோவையில் தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் சார்பாக மாநில அளவிலான வாள்வீச்சு விளையாட்டுப் போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எனத் தனித்தனியே நடைபெற்ற போட்டிகளில், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சேலம், கோவையெனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
17 வயதினருக்கு உட்பட்ட கேடட், பிரிவில், ஃபாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ், போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வாளை ஆவேசமாகச் சுழற்றி தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.
இதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாகப் போட்டி ஒருங்கிணைப்பாளர் தியாகு நாகராஜ் தெரிவித்தார்.