கோவை எட்டிமடை சோதனைச் சாவடியில் ரூ.22 லட்சம் பறிமுதல்!
கோவை எட்டிமடை சோதனைச் சாவடி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.22 லட்சத்தைக் கே.ஜி.சாவடி போலீசார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோவை எட்டிமடை சோதனை சாவடியில், கே.ஜி சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையிலிருந்து கேரளா நோக்கிச் சென்ற கார் ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில் கட்டு கட்டாகப் பணம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் காரை ஓட்டி வந்தவர்,
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ராமதாஸ் (47) என்பதும், இவர் கடந்த 18 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.
மேலும் ராமதாஸ் பழைய நகைகளை விற்பனை செய்யக் கோவையில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரூ.22 லட்சம் வாங்கி கொண்டு, அதற்குரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரூ.22 லட்சத்தைப் பறிமுதல் செய்த போலீசார் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அவிராஜ் (22) ஆகிய இருவரிடம் விசாரித்து வருகின்றனர். படம் – எட்டிமடை அருகே பிடிபட்ட ரூ.22 லட்சம்.