திடீரென ஊருக்குள் வந்த ஒற்றை காட்டு யானை – பொதுமக்கள் அலறிடித்து ஓட்டம்
கோவை நரசீபுரம் வெள்ளிமலை பட்டினம் அருகே திடீரென ஊருக்குள் வந்த ஒற்றை காட்டு யானையைக் கண்டதும் பொதுமக்கள் அலரடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை தொண்டாமுத்தூர், நரசீபுரம், ஆலந்துறை, தீத்திபாளையம், மருதமலை உள்ளிட்ட வனப்பகுதியிலிருந்து இரவு நேரங்களில் வெளியேறும் காட்டு யானைகள் அருகே உள்ள விவசாய விளை நிலங்களுக்குள் சென்று சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனைக் கண்காணித்து விரட்ட வனத்துறை சிறப்பு குழுவினர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நரசீபுரம் வனப்பகுதியிலிருந்து இன்று காலை 6 மணியளவில் வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை திடீரென வெள்ளிமலை பட்டினம் கிராமத்திற்குள் புகுந்தது.
ஒற்றைக் கொம்புடன் யானை வருவதை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டின் வெளியே பூப்பறித்துக் கொண்டிருந்த சப்தகிரி (90) என்ற முதியவரை யானை தாக்கியது.
இதில் இரண்டு கால்களில் முறிவு ஏற்பட்ட நிலையில், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காட்டு யானை சென்ற வழியில் வந்த இரண்டு கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை யானை சேதப்படுத்தியது.
தொடர்ந்து வனப்பகுதி அருகே முகாமிட்டிருந்த காட்டு யானையை வனத்துறை ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர்.
மேலும் தற்போது ஊருக்குள் வந்தது புதிதாக வந்த யானை என்பதால் மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் வன எல்லையில், வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.