பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை அவமதிக்கும் செயல் – வானதி சீனிவாசன்
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள யாத்திரையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை இழிவுபடுத்தி சிலர் கோஷமிட்டுள்ளனர். அதைக் கண்டிக்காமல் ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ரசித்துள்ளனர்.
140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்திய தேசத்தின் தலைமகன் பிரதமர் நரேந்திர மோடி. அவரது தாயார் 100 வயது வரை வாழ்ந்து மறைந்தவர்.
மகன் 12 ஆண்டுகள் குஜராத் முதலமைச்சராகவும், அதன் பிறகு பிரதமரான பிறகும், குஜராத்தில் உள்ள தனது வீட்டில் மிகமிக எளிமையாக வாழ்ந்தவர். எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்.
பிரதமரின் தாய் தேசத்திற்கே தாய் போன்றவர். அவரைக் கொச்சைப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கோஷம் போடுவதும், அதை ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் ரசிப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. காங்கிரஸின் வெறுப்பு அரசியலை நினைக்கும்போது வேதனைதான் ஏற்படுகிறது.
பிரதமர் பதவியைத் தனது குடும்பச் சொத்தாக நினைத்துக் கொண்டிருந்த ராகுல் காந்தியின் கனவைத் தகர்த்தவர் பிரதமர் மோடி. அந்த விரக்தியில் பல்வேறு பொய்களைப் பரப்பி நாட்டில் வன்முறையைத் தூண்ட கலக யாத்திரையை ராகுல் காந்தி நடத்தி வருகிறார்.
அதில்தான் பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியுள்ளனர். பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை இழிவுப்படுத்தும் செயல்.
இதற்காக ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸின் அறுவெறுக்கத் தக்க வெறுப்பு அரசியலை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தக்க பாடம் புகட்டுவார்கள்.