Economyகோயம்புத்தூர்

பருத்திக்கான 11% இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு – பஞ்சாலைகள் சங்கத்தினர் மகிழ்ச்சி

இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு அறிவிப்பினை தொடர்ந்து மத்திய அரசு பருத்திக்கான 11 சதவீதம் இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு காலகட்டத்தினை டிசம்பர் 31, 2025 வரை நீட்டித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்-SIMA சார்பில் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள SIMA வளாகத்தில் நடைபெற்றது.

இதில், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் எஸ்.கே.சுந்தரராமன், துணைத் தலைவர் ரவிசாம், செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய பஞ்சாலை சங்க பிரதிநிதிகள், பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு அறிவிப்பிற்காக மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும், இந்த அறிவிப்பு அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்படும் ஜவுளித்துறைக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், இதற்காகப் பிரதமருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும், மத்திய தொழில்துறை அமைச்சருக்கும், மத்திய விவசாய துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டனர்.

இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் பெரும் சதவீதம் அமெரிக்க சந்தையை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும், அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு இந்திய ஜவுளி தொழிலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழகத்தின் கொங்கு மண்டலங்களையும் பாதிக்கும் எனக் குறிப்பிட்டனர்.

மேலும், அமெரிக்க ஜவுளி சந்தைக்கு இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்திய உற்பத்திகளின் தேவை அமெரிக்காவிற்கும் இருக்கும் எனக் குறிப்பிட்டனர்.

இது ஜவுளித்துறைக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தி இருந்தாலும் மத்திய அரசின் பருத்திக்கான இறக்குமதி வரிவிலக்கு கால நீட்டிப்பு நடவடிக்கை நல்ல பலன்களைத் தரும்.

அத்தோடு வங்கிகளில் செலுத்த வேண்டிய கடன் தொகை கால நீட்டிப்பு மற்றும் வட்டி விகிதங்களில் சலுகைகள் ஆகியன வழங்கப்பட்டால் இந்திய ஜவுளி துறைக்குப் பேருதவியாக அமையும் எனக் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு நடவடிக்கை ஜவுளி துறையின் சவால்களைச் சமாளிக்க உதவுவதோடு எந்த விதத்திலும் பருத்தி விவசாயிகளையும் பாதிக்காது எனத் தெரிவித்தார்.

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் தொழில்துறையினர் சந்தித்துள்ள சவால்களை நீக்கும் வகையில் இந்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதில் விரைவில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

இந்தச் சவால்கள் அனைத்தும் புதிய சந்தைகளை உருவாக்க வழிவகுக்கும் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!