அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கையில் பதாகையுடன் போராட்டம்..!
திருப்பூர் மாவட்டத்திலிருந்து குப்பைகள் கொண்டு வந்து கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டும் முயற்சியைக் கைவிடக்கோரி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கையில் பதாகைகள் ஏந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமசந்திரன் தலைமையில் விக்டோரியா ஹால் அரங்கில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாள் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச் செல்வன், மற்றும் துணை ஆணையாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளி கோருவது, பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல், உள்ளிட்டவை தொடர்பாக 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாகக் கூட்டம் நடைபெற்ற விக்டோரியா ஹால் முன்பாக அதிமுக மாமன்ற குழுத் தலைவர் பிரபாகரன் மற்றும் அதிமுக உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வெள்ளலூர் குப்பை கிடங்குமூலம் மாநகராட்சி நிர்வாகம் பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி கையில் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளலூர் குப்பை கிடங்கால் மிகப்பெரிய சுகாதார கேடு ஏற்பட்டுள்ள சூழலில் தற்போது திருப்பூரிலிருந்து குப்பைகளைக் கொண்டு வந்து வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அப்படி கொண்டு வந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
வெள்ளலூர் குப்பை கிடங்கை வைத்து ஊழல் நடைபெற்ற நிலையில் அதுகுறித்து தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.