கனடா நாட்டு பெண்ணை கல்யாணம் செய்த கோவை இளைஞர்..!
கோவையைச் சேர்ந்த இளைஞருக்கும், கனடாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் பாரம்பரிய முறையில் நடைபெற்றது.
கோவை நவ இந்தியா பகுதியைச் சேர்ந்த மோகன், பிரேமலதா தம்பதியரின் மகன் கௌதம். இவர் கனடாவில் பள்ளி மற்றும் கல்லூரியென 11 ஆண்டுகள் பயின்றுள்ளார்.
இவருடன் கல்லூரியில் பயின்ற அமெரிக்கா வாஷிங்டன் டி.சி பகுதியைச் சேர்ந்த ராபர்ட் டக்ளஸ் பிராட், எலினிட்டா யசன்யா பிராட் தம்பதியரின் மகள் சாரா என்பவரைக் காதலித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டுக் கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற தங்களது பெற்றோர்களிடம் இருவரும் காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர்.
அவர்களது பெற்றோர்கள் மேற்படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் கௌதம் பட்ட மேற்படிப்பை முடித்தவுடன் கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் சாராவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் இருவரின் பெற்றோரும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மணமகளின் பெற்றோர் இந்திய கலாச்சாரத்தின் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டதால், தங்களது மகளுக்குத் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய வேண்டும், கோவையில் திருமணம் நடத்த வேண்டும் என்றும் கௌதமின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணமகளின் பெற்றோர், மணமகள் அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட 15 பேர் கோவைக்கு வந்தனர். திருமணத்திற்கு தேவையான பட்டுப் புடவை மற்றும் பட்டு வேஷ்டிகளை காஞ்சிபுரத்தில் சென்று எடுத்து வந்தனர். மேலும் தமிழ் கலாச்சார முறைப்படி பத்திரிக்கை அடித்து மணமகனின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலைக் கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றது.
தொடர்ந்து மணமகள் சாராவின் கழுத்தில் மணமகன் கௌதம் மாங்கல்யம் அணிவித்து திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் கலாச்சார முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தை அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் வியந்து பார்த்தனர்.