கோவையில் காப்பர் கடையின் பூட்டை உடைத்துத் திருட்டு!
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள அலுமினியம், காப்பர் விற்பனை கடையின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் அலிஅஸ்கர். இவர் காந்திபுரம் நஞ்சப்பாசாலையில் அலுமினியம் மற்றும் காப்பர் கம்பி விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு வழக்கம்போலக் கடையைப் பூட்டி விட்டுச் சென்றனர்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து நேற்று காலை வழக்கம்போல ஊழியர்கள் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து விரைந்து வந்த கடை உரிமையாளர் அலி அஸ்கர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த சுமார் ரூ.30 லட்சம், 2 டன் காப்பர் கம்பிகள் மற்றும் ரூ.3.80 லட்சம் திருடப்பட்டிருந்ததும், உள்ளே இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அலி அஸ்கர் காட்டூர் போலீசுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயவியல் துறையினர் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.