கோவை: வனத்துறை வாகன கண்ணாடியை உடைத்த காட்டு யானை!
கோவை தேவராயபுரம் அருகே காட்டு யானையை விரட்டச் சென்ற வனத்துறை வாகன கண்ணாடியை யானை முட்டி உடைத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு விளை நிலங்களைச் சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டு யானை தேவராயபுரம் அருகே முகாமிட்டது. தகவலறிந்து வந்த போளூவாம்பட்டி வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையைக் கண்காணித்து அதிகாலையில் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தேவராயபுரம் மகாலட்சுமி கோவிலுக்குச் செல்லும் ஒற்றையடி பாதை வழியாக வனத்துறை வானத்தில் காட்டு யானையை விரட்டிச் சென்றபோது, திடிரெனக் காட்டு யானை நின்று வனத்துறையின் வாகனத்தைப் பார்த்து ஆவேசமாக ஓடி வந்து முட்டித் தள்ளியது.
இதில் வாகனத்தில் முகப்பு கண்ணாடி உடைந்தது. சுதாகரித்துக் கொண்ட வனத்துறையினர் வாகனத்தைப் பின்னே எடுத்துச் சென்று உயிர் தப்பினர். காட்டு யானை விரட்டுச் சென்ற வனத்துறையினர் வாகனத்தை யானை ஆக்ரோஷமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.