கல்லூரி மாணவர்கள் விடுதிகள் போலீசார் அதிரடி ஆய்வு – 13 பேர் கைது
கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள் போலீசார் திடீர் ஆய்வு – ஆயுதங்கள், கஞ்சா, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் 13 பேர் கைது.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கோவை மதுக்கரை, செட்டிபாளையம், சூலூர், ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்துத் தங்கும் விடுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, குற்றச்சம்பங்களில் ஈடுபடும் நபர்கள் பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் செட்டிபாளையம் மற்றும் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செட்டிப்பாளையம், மலுமிச்சம்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பேரூர் மற்றும் கருமத்தம்பட்டி சரக துணை காவல் கண்காணிப்பாளர்கள், 10 காவல் ஆய்வாளர்கள், மற்றும் 400 காவலர்கள் அடங்கிய குழுவினர் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள தனியார் விடுதிகள் அறைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் குட்கா, கஞ்சா, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறியதாவது :
அதிகாலை முதல் கல்லூரி மாணவர்கள் தங்கும் தனியார் விடுதிகளில் மேற்கொண்ட சோதனையின்போது 13 பேரைப் பிடிபட்டுள்ளனர். மேலும் சந்தேகப்படும் நபர்கள் 55 பேர் பிடிபட்டுள்ளனர்.
இதில் 6.3 கிலோ கஞ்சா, 52 கிலோ குட்கா, கத்திகள் உள்ளிட்ட 8 ஆயுதங்கள், போலியான பதிவு எண் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத 46 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆபரேசன் கிளீன் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் குற்ற பின்னணி உள்ளவர்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து கோவையில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனைகள் நடைபெற்றது.
தற்பொழுது பிடிக்கப்பட்டவர்களில் நான்கு பேர்மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு, கொள்ளை வழக்கு ஆகிய வழக்குகள் உள்ளது.
இந்த வழக்கில் சூடான் நாட்டைச் சேர்ந்த நபர் உள்ளார் அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பிறகு தான் போதை பொருட்கள் எங்கிருந்து வந்தது, இதில் யார் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என்பது பற்றித் தெரியவரும். மேற்கொண்டு கைது நடவடிக்கை இருக்கும்.
அதே போல இந்தச் சோதனையில் பேடிஎம் போன்ற பண பரிவர்த்தனை மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு பகுதியில் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள்மீது எழுந்த பாலியல் புகார் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினருடன் சேர்ந்து பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இரண்டு ஆசிரியர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.