கோவையில் பிளாஸ்டிக் கழிவு மூலம் மின்சார உற்பத்தி திட்டம் – அமைச்சர் கே.என்.நேரு.
கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா வளாகத்தைத் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.என்.நேரு கூறியதாவது: செம்மொழி பூங்கா பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற முதலமைச்சர் அறிவுரையின்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது செம்மொழி பூங்காவிற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் கூடுதலாக ரூ.50 கோடி வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். எனவே முதலமைச்சரின் அறிவுரையைப் பெற்று அந்த நிதியை ஒதுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஆர்.எஸ்.புரம் மாதிரி பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மாணவர் விடுதி, மற்றும் வகுப்பாறைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்.எஸ். புரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தளத்திலான ஹாக்கி மைதான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கவுண்டம்பாளையம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையத்தை ஆய்வு செய்கிறோம்.
உக்கடம் பேருந்து நிலையத்தை நவீன முறையில் மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் ரூ.70 கோடி செலவில் பயோமெனிக் முறையில் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட உள்ளது.
மேலும் கோவையில் ரூ.250 கோடி மதிப்பில் பிளாஸ்டிக் கழிவுகள்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைத் துவங்க உள்ளோம். பாதாள சாக்கடைத் திட்டம் குறிச்சி, குனியமுத்தூர் பகுதியில் முடிக்கப்பட்டுவிட்டது.
மீதமுள்ள பணிகள் முடிப்பதற்கு சற்று தாமதமாகும், ஆறு மாத காலத்திற்குள் அதனை முடிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிய வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் வரி குறைவுதான். 600 சதுர அடிக்குக் கீழ் உள்ளதற்கு எந்த ஒரு வரிகளும் கிடையாது. முதலமைச்சரும் வரியை ஒருமுறை உயர்த்திவிட்ட பிறகு மீண்டும் உயர்த்த கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும் வரி உயர்வு என்பது ஏற்கனவே போடப்பட்டது தானே தவிர, புதிதாக எந்த வரியையும் உயர்த்தவில்லையென தெரிவித்தார்.