Economyதமிழ்நாடு

கோவை: மாநில வணிகவரித்துறை அதிகாரிகளிடம் தொழில் முனைவோர்கள் மனு!

கோவையில் உள்ள தொழில்முனைவோர்களை, வணிக வரித் துறை அதிகாரிகள் திருடர்கள்போல நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கோவை தொழில் அமைப்பு கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில வணிக வரித்துறை மூலம் ஏற்படும் நெடுக்கடிகளை கலைய நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் மாநில வணிக வரித்துறை இணை ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.

கடந்த 2017 – 2022 காலகட்டத்தில் ஜி.எஸ்.டி யில் போடப்பட்ட தொகைகள் போர்டலில் மட்டும் பதிவேற்ற செய்த நிலையில் அதற்கான அபராதத்தை கட்ட வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கபடுவதை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து கோவை தொழில் அமைப்புகளில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் சுமார் 1,000 திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் உள்ளோம். இந்நிலையில் கடந்த 2017 முதல் 2022 வரை ஜி.எஸ்.டி -யில் பல்வேறு காரணங்களைக் கூறி போர்டலில் வரித் தொகையைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.

ஆனால் இதனைத் தொழில் முனைவோர்கள் கவனிக்க தவறி விடுகிறார்கள். இதைக் காரணம் காட்டி பல லட்சங்களில் அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறோம். எங்கள் கூட்டமைப்பில் உள்ள 23 தொழில் அமைப்புகளுக்குஓ வந்த தொடர் புகாரைத் தொடர்ந்து கோவையில் உள்ள வணிகவரித்துறை இணை ஆணையர் மூலம் தமிழக வணிகவரித்துறை ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

குறிப்பாக 2017 -ல் ஜி.எஸ்.டி துவக்க காலத்தில் என்ன பிரச்சனைகள் உள்ளது என்று அதிகாரிகளுக்குத் தெரியாத சூழலில் இருந்தது. அப்போது பல புதிய விதிகள் கொண்டுவரப்பட்டு செம்மைப்படுத்தினர்.

2019-ல் கொரோனா பெருந்தொற்று, ஜி.எஸ்.டி அமலாக்கத்தால் தொழில்துறை முடக்கம் எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த நேரத்தில் போடப்பட்ட அபராதத்திற்கு வட்டி மேல் வட்டி போட்டுக் கேட்கிறார்கள், நோட்டீஸ் வழங்குகிறார்கள் இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அதேபோல வணிகவரித்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே நின்று, உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகத் தொழில்துறையினர் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களைத் தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரிபார்க்கும் போது, அதில் வரும் சிறு பிழைகளுக்கு கூட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர்.

மேலும் அதிகாரிகள் தொழில் முனைவோரை திருடர்கள் போல பார்க்கிறார்கள், அதேபோல் சிறு பிழைகளுக்காக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சரக்கு கட்டணத்தை விட மூன்று மடங்கு அபராதம் விதிக்கின்றனர்.

இதனை தொழில் துறையினர் மேல்முறையீடு செய்து ஓராண்டு கழித்து திரும்ப பெற வேண்டிய சூழல் உள்ளது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும், அதேபோல தொழில் முனைவோர்களை அழைத்து ஒவ்வொரு மாதமும் குறை தீர்ப்பு கூட்டம் போல நடத்தி குறைகளை கேட்டு அறிகிறோம் என தெரிவித்துள்ளனர்,

உடனடியாக தொழில் துறையினருக்கு நெருக்கடி கொடுக்கும் இந்த நடவடிக்கைகளை வணிகவரித்துறை அதிகாரிகள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!