5-வது நாளாகப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்!
கோவை சுங்கம் அரசுப் பேருந்து பணிமனை முன்பு ஐந்தாவது நாளாகப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2003 -க்கு பிறகு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிக்குச் சேர்ந்த ஊழியர்களுக்குப் போடப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக முழுவதும் 21 மையங்களில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் கோவை சுங்கம் அரசுப் பேருந்து பணிமனை முன்பு 5-வது நாளாகச் சுமார் 60க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனகராஜ் கூறியதாவது: கடந்த ஐந்து நாட்களாகப் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தித் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
முதல் நாளில் அழைத்துப் பேசி ஓய்வுதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் முதல் கட்டமாக ரூ.1,119 கோடி மட்டும் கொடுப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் மற்ற கோரிக்கைகள்குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
அதன் காரணமாகவே தொடர்ந்து போராடி வருகிறோம். தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இதுவரை அரசு எங்களை அழைத்துப் பேசவில்லை. அனைத்து தொழிலாளர்களும் பணியைப் புறக்கணித்துக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டால், பொது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் இதைத்தான் அரசு விரும்புகிறதா? உடனடியாகப் போக்குவரத்து ஊழியர்களை, தமிழ்நாடு அரசு அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்தார்.