கோயம்புத்தூர்தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்ப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என பரிந்துரை – ஆறுச்சாமி

மாதம் ஒருமுறை தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்ப்புக் கூட்டம் நடத்த வேண்டும் எனத் தமிழக முதலமைச்சரிடம் பரிந்துரை செய்ய உள்ளதாகத் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுசாமி தலைமையில், அரசுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, உட்பட துரை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் நலனுக்கக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குறித்து வாரிய தலைவருக்கு எடுத்துரைத்தனர். முன்னதாகத் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆறுச்சாமி கூறும்போது: தமிழ்நாட்டிலேயே கோவை மாவட்டத்தில் தான் அதிகமான தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சம்பளத் தொகையும் கோவை மாவட்டத்தில் தான் அதிகமாகத் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் ஊதியம் குறித்து ஒப்பந்த நிறுவனம் மற்றும் அரசு அலுவலர்களை அழைத்து வரன்முறை அமைத்து ஊதிய உயர்வுகுறித்து முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஊதியம் முறையாக வழங்கப்படுவதாக ஆதாரங்கள் அளித்துள்ளனர்.

மேலும் மாதம் ஒரு நாள் தூய்மை பணியாளர்களுக்கு எனக் குறை தீர்ப்புக் கூட்டம் நடத்தும் கோரிக்கையை முதலமைச்சரிடம் முன் வைக்க உள்ளோம்.

தூய்மை பணியாளர்கள் வருகை நேர பதிவை அரை மணி நேரம் நீட்டிக்க வேண்டும், அதே சமயம் அரை மணி நேரம் தாமதமாக வரும்பொழுது பணி முடியும் நேரத்தையும் அரை மணி நேரம் கூடுதலாக்கி கொள்ள வேண்டும்.

தூய்மை பணியாளர்கள் சிலர் கையுறை முக கவசம் ஆகியவற்றை அணியாதது குறித்து பேசும்போது கையுறை அணிவதால் வியர்த்து, கைகளில் நோய்கள் ஏற்படுவதாகவுன் முக கவசம் அணியும்பொழுது சுவாசத்தில் சிரமங்கள் ஏற்படுவதாகப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் உயிர் பாதுகாப்பிற்காகத் தான் உபகரணங்கள் வழங்கப்படுவதாகத் தூய்மை பணியாளர்களிடம் நான் எடுத்துரைத்துள்ளேன். சிரமங்கள் ஏற்படும்பொழுது மாநகராட்சி ஆணையாளர் ஒருமுறை பயன்படுத்தும் கையுறைகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எவ்வளவு கூறினாலும் தூய்மை பணியாளர்கள் சிலர் பாதுகாப்பில் கவன குறைவாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்குப் போதிய பயிற்சிகள் வழங்கிப் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தான அவசியத்தை வழங்குவோம் எனத் தெரிவித்தார்.

மேலும் இடம் மாறுதல்குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் அது போன்று நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளும்படி ஆணையாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், நடைமுறை சிக்கல்கள் எதுவாக இருந்தாலும் அதனைத் தவிர்த்துப் பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள் என்று கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!