Top Storiesதமிழ்நாடு

வாளையாறு அருகே லாரிமீது கார் மோதி விபத்து – சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பலி

கேரளா மாநிலம் வாளையாறு அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரிமீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த இரண்டு பெண்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

சென்னை அம்பத்துரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி மலர் (40) குழந்தைகள் தீபிகா (9), கஷிகா (4) இவர்களது, உறவினர்களான ஸ்ரீராம் மற்றும் அவரது மனைவி லாவண்யா (40) மகன் ஹிருத்திக் ரோஷன் (16), ஆகியோருடன் கேரளா மாநிலம் கொச்சின் காக்க நாடு பகுதியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவு மீண்டும் சென்னை செல்வதற்காகக் காரில் கிளம்பினர். அப்போது காரைச் செந்தில் ஒட்டி வந்தார். கார் வாளையாறு, சந்திராபுரம் அருகே கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரிமீது பயங்கரமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் மலர் மற்றும் லாவண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த வாளையாறு போலீசார் தீயணைப்பு துறையினருடன் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது விபத்தில் சிக்கிய காருக்குள் சடலமாகச் சிக்கிக் கொண்டிருந்த மலர் உடலை நீண்ட நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதையடுத்து உயிரிழந்த மலர் மற்றும் லாவண்யா உடல் பிரேத பரிசோதனைக்காகப் பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் காலில் பலத்த காயமடைந்த ஹிருத்திக் ரோஷன் (16), சிறுமி கஷிகா (4) ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செந்தில், ஸ்ரீராம், தீபிகா ஆகியோர் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் விபத்து தொடர்பாக வாளையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காரை ஓட்டி வந்த செந்தில் அசந்து தூங்கியது விபத்துக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!