ஜம்மு – காஷ்மீரில் மேகவெடிப்பு: 30பேர் உயிரிழந்த நிலையில் 120 மீட்பு!
ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஷ்த்வார் மாவட்டத்தின், சஸோட்டி எனும் மலைக் கிராமத்தில் இன்று (ஆக.14) மதியம் சுமார் 12 மணியளவில் மிகப் பெரியளவிலான மேகவெடிப்பால் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த 250-க்கும் மேற்பட்ட பக்தர்களில் சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், உயிரிழந்தோரின் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கிருந்து 120-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 38 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், செஞ்சிலுவை இயக்கம் உள்ளிட்ட ஏராளமான மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவதுமாக நிறைவடைய சுமார் 20 நாள்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.