ஒன்றிய பாஜக அரசு கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஒன்றிய பாஜக அரசு கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்திற்கு அறிவித்த மெட்ரோ திட்டப் பணிகளை விரைந்து துவங்க வேண்டும், விடுபட்ட பகுதிகளை அதில் இணைக்க வேண்டும் மற்றும் கோவை மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட மெட்ரோ பணிகளை மெத்தனம் காட்டாமல் விரைந்து துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர். மாநில துணைப் பொதுச்செயலாளர் நித்தியானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நித்தியானந்தம் கூறியதாவது: கோவை மாவட்டத்திற்கு மெட்ரோ திட்டப் பணிகள் அறிவித்து நீண்ட காலமாகிவிட்டது., ஆனால் பணிகள் இதுவரை துவங்கவில்லை.
மேலும் இத்திட்டத்தில் மேட்டுப்பாளையம், மற்றும் பொள்ளாச்சி பகுதிகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதனை உடனடியாக இணைக்க வேண்டும். தற்போது புதிய வகை நோய் தாக்குதல்கள் இருந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் அதிகளவு மக்கள் வசித்து வருகிறார்கள் எனவே எய்ம்ஸ் மருத்துவமனையைக் கோவைக்குக் கொண்டு வர வேண்டும். இதனை ஒன்றிய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்,
அதேபோல் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாகக் கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகள் தொடர்பாக எங்களது சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்பி வருகிறார்.
இந்த அனைத்து பிரச்சனைகள் சார்ந்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.