சென்னையில் கொலை: கோவை கிணற்றில் வீசப்பட்ட உடல் – 4 பேர் கைது
சென்னையில் நண்பரைக் கொலை செய்து கோவையில் உள்ள கிணற்றில் வீசிய வழக்கில் திறப்பமாக நான்கு பேரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இமானுவேல் மகன் நியூட்டன் (28). இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள அரசு விடுதியில் தங்கி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்.
இவரது நண்பர் பாளையங்கோட்டையை சேர்ந்த முத்துக் குட்டி மகன் பெனிடோ (27), சென்னை தபால் நிலைய வாகன ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நியூட்டனின் நண்பரான பாளையங்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் (24) என்பவர் வேலை தேடி சென்னைக்கு வந்து அண்ணா நகரில் உள்ள நியூட்டனின் அறையில் தங்கி உள்ளார்.
ஜெயராமனுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நியூட்டன் ஆட்டோ வாங்கி கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால் ஜெயராமன் முறையாக ஆட்டோவை ஓட்டாமல் தினமும் மது குடித்துவிட்டு சுற்றி திரிந்துள்ளார்.
இது குறித்து கடந்த மே மாதம் அறையில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தபோது நியூட்டன் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் நியூட்டன் தாக்கியதில் ஜெயராமன் உயிரிழந்தார்.
இதையடுத்து உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று யோசித்தபோது, கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள குதிரைப் பண்ணையில் பணியாற்றி வரும் பாலமுருகன் (40) என்பவரை நியூட்டன் தொடர்பு கொண்டு உள்ளார். அவர் இங்குள்ள கிணற்றில் வீசலாம் என யோசனை கூறியதோடு, கோவைக்கு உடலை கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நியூட்டன், பெனிடோ மற்றும் மேலும் இரண்டு நண்பர்களோடு சேர்ந்து காரில் ஜெயராமன் உடலை கோவைக்கு எடுத்து வந்துள்ளனர். அந்த உடலை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி வீசியுள்ளனர். பின்னர் அனைவரும் சென்னைக்குச் சென்ற நிலையில், பாலமுருகன் அடிக்கடி பணம் கேட்டு நியூட்டனிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
போலீசில் சரணடைந்தது குற்றவாளிகள்
ஒரு கட்டத்தில் செலவு செய்ய முடியாத சூழலில் இவ்வழக்கில் சரணடைந்து விடலாம் என அனைவரும் கூடி பேசியுள்ளனர். பின்னர் வழக்கறிஞர் ஒருவரை சந்தித்தபோது, அவர் பாலமுருகன் மற்றும் வேறு ஒருவரை போலியாக சரணடைய யோசனை கூறியுள்ளார்.
இதையடுத்து பாலமுருகன் மற்றும் பாளையங்கோட்டையை சேர்ந்த முருகப்பெருமாள் (24) ஆகிய இரண்டு பேர் செட்டிபாளையம் போலீசில் சரணடைந்துள்ளனர்.
போலீசார் இரண்டு பேரிடமும் மேற்கொண்ட தொடர் விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர்.
பாலமுருகன் மற்றும் முருகப்பெருமாள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கோவையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த நியூட்டன் மற்றும் பெனிடோ ஆகிய இருவரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே மே மாதம் கிணற்றில் வீசப்பட்ட ஜெயராமன் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவரது தானா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஜெயராமன் தாயின் டி என் ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
மேலும் சென்னையில் இருந்து ஜெயராமன் உடலை எடுத்து வர உதவிய நியூட்டனின் நண்பர்கள் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.