செம்மணி படுகொலைகளுக்கு நீதி வேண்டும்: கோவையில் எலும்புக்கூடுகளுடன் முற்போக்கு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.
கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு செம்மணி படுகொலைகளுக்கு நீதி கேட்டு, எலும்புக்கூடுகளுடன் முற்போக்கு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே செம்மணி என்ற இடத்தில் புதைகுழியில் குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுகொலைகளுக்கு நீதி கேட்டுப் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாகக் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தபெதிக உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் சார்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடத் தமிழர் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கு.ராமகிருட்டிணன் கூறும்போது: “இலங்கையில் சிங்கள பேரினவாத அரசு 30 ஆண்டு காத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பேர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
காணாமல் போனவர்களைத் தேடித் தாருங்கள் என அவர்களின் உறவினர்கள் ஐ.நா. மன்றத்தில் முறையீடு செய்து வந்தனர்.
இந்த நிலையில் செம்மணி பகுதியில் தோண்ட தோண்ட நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சர்வதேச சமூகம் நீதி விசாரணை செய்து படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.