நண்பனைக் கொன்று கிணற்றில் வீசிய இளைஞர்கள்: 2 மாதங்கள் கழித்த போலீசில் சரண்
கோவையில் நண்பரைக் கொன்று கிணற்றில் வீசிய இளைஞர்கள், இரண்டு மாதங்களுக்குப் பின் போலீஸில் சரணடைந்தனர். கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் நண்பரின் சடலம் மீட்கப்பட்டனர்.
நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த பாலமுருகன் (40). இவரின் தந்தை மலுமிச்சம்பட்டி அருகே குதிரை பண்ணையில் வேலை செய்து வருவதால், இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
பாலமுருகன் கொலை, திருட்டு வழக்கில் கைதாகி நெல்லை சிறையிலிருந்து உள்ளார். அப்பொழுது பாளையங்கோட்டையை சேர்ந்த முருகப்பெருமாள் (25) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலமுருகனுக்கு போன் செய்த முருகப்பெருமாள் தனக்கும், தனது நண்பர் ஜெயராமன் (25) என்பவருக்கும் கோவையில் வேலை வாங்கி தருமாறு கூறி உள்ளார்.
அதனால் பாலமுருகன் அவர்களைக் கோவை மலுமிச்சம்பட்டிக்கு கிளம்பி வரச் சொல்லி இருக்கிறார். இதை அடுத்து நெல்லையிலிருந்து இரண்டு பேரும் கோவை வந்தனர்.
அப்போது பாலமுருகன் மதுவை வாங்கிக் கொண்டு பண்ணை அருகில் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு மூவரும் மது அருந்தி உள்ளனர். அப்பொழுது முருகப்பெருமாளுக்கு, ஜெயராமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரமடைந்த முருகப்பெருமாள் தாக்கியதில் ஜெயராமன் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனால் பயந்து போன இருவரும் அவரது உடலைக் கல்லைக் கட்டி அருகில் உள்ள கிணற்றில் போட்டு விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு வந்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோர் காவல் துறையிடம் இந்தச் சம்பவம்குறித்து கூறி சரணடைந்துள்ளனர்.
இதையடுத்து செட்டிபாளையம் போலீசார் கிணற்றில் கிடக்கும் ஜெயராமனின் உடலை மீட்கும் பணியில் கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு சேர்ந்து ஈடுபட்டனர்.
முதல் கட்டமாகச் சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மோட்டார் வைத்துத் தண்ணீரை இறைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் பணிகள் தொடர்ந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின் ஜெயராமன் உடல் மீட்கப்பட்டது.
பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்தனர்.
தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து கொலைக்கான காரணம்குறித்து விசாரித்து வருகின்றனர்.