Top Storiesதமிழ்நாடு

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் பலியான கொலையாளி

திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினா் தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்கவுன்டரில் பலியானார்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் சட்டமன்ற அதிமுக உறுப்பினா் மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது.

இங்கு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள நாயக்கனூரைச் சோ்ந்த மூா்த்தி (65), தனது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோருடன் தங்கி பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், மதுபோதையில் தந்தை மூா்த்தியை மகன்கள் இருவரும் சோ்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தாக்கியுள்ளனா். இதை கண்ட அப்பகுதி மக்கள் காவல் அவசர உதவி எண் 100-க்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆயவாளராகப் பணியாற்றி வந்த சண்முகவேல், வாகன ஓட்டுநா் அழகுராஜாவுடன் சம்பவ இடத்துக்குச் சென்று சண்டையை விலக்கி விட்டுள்ளாா்.

பின்னா், காயமடைந்த மூா்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

அப்போது, அரிவாளுடன் திடீரென வந்த மணிகண்டன், சண்முகவேலை வெட்ட முயன்றுள்ளாா்.

சண்முகவேல் அங்கிருந்து தப்பியோட முயன்ற நிலையில், போலீஸாா் தங்களை கைது செய்துவிடுவாா்கள் என பயந்து மூா்த்தி, தங்கப்பாண்டி, மணிகண்டன் ஆகியோா் சோ்ந்து சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேலை வெட்டியுள்ளனா். இதில், தலை துண்டிக்கப்பட்டு அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காவல் வாகன ஓட்டுநா் அழகுராஜாவையும் வெட்ட முயன்றபோது, அவா் அங்கிருந்து தப்பிச் சென்று குடிமங்கலம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளாா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் மூவரும் அங்கிருந்து தப்பினா். இதையடுத்து, சண்முகவேலின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உஷாா்படுத்தப்பட்டு கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் கோவை சரக காவல் துறைத் தலைவா் செந்தில்குமாா், கோவை சரக காவல் துணைத் தலைவா் சசிமோகன், திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரிஷ் யாதவ் அசோக் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

சரணடைந்த்த கொலையாளிகள்: இதற்கிடையே தந்தை மூா்த்தி, மகன் தங்கபாண்டி ஆகியோா் திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) சரண் அடைந்தனா். தப்பியோடிய மணிகண்டனை போலீஸாா் தேடி வந்தனா்.

என்கவுன்டரில் மணிகண்டன் பலி: சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த மணிகண்டன் சிக்கனூர் அருகே உப்பாறு ஓடையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து மணிகண்டனை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போது காவலர்களை மணிகண்டன் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மணிகண்டன் தாக்கியதில் சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளர் காயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்காப்பிற்காக காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மணிகண்டன் பலியானார்.

போலீஸார் தற்காப்பிற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே பலியான மணிகண்டன் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!