ரூ. 50 ஆயிரம் லஞ்சம்: வட்டாட்சியர், கிராம உதவியாளர் கைது!
கோவையில் சொத்து மதிப்புச் சான்றிதழ் வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூர் வட்டாட்சியர் மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
கோவை பேருர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர், தனது நிலத்திற்கான சொத்து மதிப்புச் சான்றிதழ் பெற, தனது மேலாளர் ரஞ்சித் என்பவர்மூலம் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்த நிலையில், சொத்து மதிப்புச் சான்றிதழ் வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் எனப் பேரூர் வட்டாட்சியர் ரமேஷ்குமார் கேட்டுள்ளார்.
இதுகுறித்து ரஞ்சித் கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸ் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரஞ்சித்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த வட்டாட்சியர் ரமேஷ்குமாரை சந்தித்து ரஞ்சித் ரூ.50 ஆயிரம் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அவருடன் இருந்த மாதம்பட்டி கிராம உதவியாளர் சரவணன் அப்பணத்தை பெற்றார்.
இந்நிலையில் அலுவலகம் அருகே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடிரென உள்ளே வந்து சோதனையிட்டபோது லஞ்ச பணம் கையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து வட்டாட்சியர் ரமேஷ் குமார் மற்றும் சரவணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின் இருவரையும் கைது செய்த போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.