கோவை குண்டுவெடிப்பு வழக்கு: டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 52 பேர் உயிரிழந்தனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான டெய்லர் ராஜா என்பவரை, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் வைத்துக் கைது செய்தனர்.
28 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது விசாரணைக்காக டெய்லர் ராஜா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கப் போலீசார் அனுமதி கோரிய நிலையில், 5 நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி வெர்ஜின் வெஸ்டா அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் 21 ஆம் தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மீண்டும் அவரைப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காகத் தனி இடத்திற்கு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அழைத்துச் சென்றனர்.