மருத்துவ மாணவி உயிரிழப்பு – முறையாக விசாரிக்க மாணவர் அமைப்பினர் கோரிக்கை
நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி சேர்ந்த கந்தசாமியின் மகள் பவபூரணி. கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மயக்கவியல் துறையில் பயின்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறந்ததும் உடனடியாக அவரது பெற்றோருக்குத் தகவல் வழங்கப்படாமல், மறுநாள் காலையில் தான் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
இந்தத் தாமதமும், மரணத்திற்கான தெளிவான காரணம் சொல்லப்படாததால், மாணவியின் மரணத்தைச் சுற்றி பல சந்தேகங்கள் எழுந்து உள்ளது. மேலும், பவபூரணியின் தந்தைக்கு கல்லூரி நிர்வாகத்தினர் முரணான தகவல்களை வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி ஆகிய அமைப்புகள் இணைந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தன.
மரணம் நடந்த வழிக்குரிய உண்மைகளை வெளிக்கொணர உடனடி மற்றும் நியாயமான விசாரணை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதில் மாணவர் மற்றும் சமூக அமைப்புகளின் பலர் கலந்து கொண்டனர்.
பவபூரணியின் மரணம் தொடர்பாக முழுமையான உண்மை வெளியர வேண்டும், மேலும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், நிச்சயமாக விரைவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.