கோயிலுக்குள் புகுந்து பக்தரைத் தாக்கிய இளைஞர் கைது!
காந்திநகரில் மது போதையில் கோயிலுக்கு வந்தவரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
கோவை சிவானந்தாகாலணி காந்திநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜேஷ் (34). இவர் வியாழக்கிழமை இரவு வீட்டின் அருகே உள்ள சமயபுர மாரியம்மன் கோயிலுக்குச் சென்றார்.
அப்போது சாமி வழிபாடு செய்து விட்டுக் கோயிலில் இருந்தபோது மது போதையில் இளைஞர் ஒருவர் கோயிலுக்கு வந்து அமர்ந்துள்ளார். இதுகுறித்து ராஜேஷ் கேட்டபோது, மது போதையில் இருந்த இளைஞர் ராஜேஷிடம் தகாத வார்த்தைகளால் பேசித் தகராறில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் திடிரெனக் கோயில் வளாகத்தில் இருந்த மரக்கட்டைகள், இரவு ராடுகளை கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதனால் ராஜேஷ் சத்தம் போடவே அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த இளைஞர் பொதுமக்கள் அதிகமாகக் கூடியதை அடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.
சம்பவம் தொடர்பாக ராஜேஷ் ரத்தினபுரி போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மது போதையில் தகராறு செய்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் ஹரீஸ் (18) என்பதும், மது போதையில் வேண்டுமென்றே தகராறி ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து ஹரீஸை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.