அரசு மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணிடம் தங்க நகையைத் திருடிய நபர் கைது!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சுமார் 65 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் கடந்த 27ஆம் தேதி அன்று சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று உள்ளார்.
அப்பொழுது அங்கு நின்று கொண்டு இருந்த நபர் மருத்துவமனையின் மேல் மாடியில் இலவசமாகத் தங்க கம்மல் கொடுப்பதாகக் கூறி அழைத்துச் சென்று அப்பெண்ணின் கழுத்தில் இருந்த 03 பவுன் தங்க செயினை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருடிச் சென்று உள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விரைந்து குற்றவாளியைக் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
அதன்படி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டும், சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன் விசாரணை செய்து வந்தது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் சித்திரவேல் (49) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண்ணை ஏமாற்றி திருடியது தெரிந்தது.
சித்திரவேலை கைது செய்து, அவரிடமிருந்து 03 சவரன் தங்க நகையைப் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சுமார் 40 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.