கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாநகரட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு துவக்கம்!

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது.

இதன் துவக்க விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மாணவர்களுக்கான இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நீட் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சித்தாபுதூர் பள்ளியில் நடைபெறும் இதற்கான போக்குவரத்து வசதிகள் உணவு வசதிகள் அனைத்தும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பவன் குமார், தேசிய மருத்துவர்கள் தினமான இன்றே நாம் இந்த இலவச நீட் தேர்வுப் பயிற்சி வகுப்பினை துவக்கி உள்ளதாகத் தெரிவித்தார்.

மருத்துவ பணி என்பது பாராட்டப்பட வேண்டிய பணி அதனை மாணவர்களாகிய நீங்கள் செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு எனத் தெரிவித்தார். இந்தப் பயிற்சிக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதி உணவு வசதியென அனைத்து தேவைகளும் செய்து தரப்படும் எனத் தெரிவித்தார்.

Be Dedicated Be Humble என்றும் அவர் இந்த வகுப்பில் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் முழு கவனத்துடன் பாடங்களைப் படிக்க வேண்டும் முதல் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி படிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் நடப்பாண்டில் அரசு பள்ளியில் படித்த உயர் கல்வி சார்ந்தவர்கள் சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அடுத்த முறை இதைவிட அதிகமானவர்கள் வெற்றி பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், டாக்டர் என்பது நம்முடைய சமுதாயத்தில் உயர்ந்த படிப்புக் கடவுளுக்கு அடுத்து நாம் தேடுவது மருத்துவரைத் தான் மருத்துவர்களுக்குச் சமுதாயத்தில் நல்ல மரியாதை உள்ளது எனத் தெரிவித்தார்.

நர்சிங் படிப்பிற்கான இடங்கள் கல்லூரிகளில் கிடைப்பதில்லை எனவும் கூறினார். ஒரு வருடம் கடினமாகப் படித்தால் வெற்றி உங்கள் பக்கம் நிற்கும் எனக் கூறிய அவர் செல்போனில் நேரத்தைச் செலவிடுவதை தவிர்த்து நன்றாகப் படிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் கல்விக்கு உதவுவதற்கு எப்பொழுதும் நாங்கள் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!