கோவை வந்த ஒன்றிய இணையமைச்சர் கண்டித்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
நாடு முழுவதும் மூடப்பட்ட தேசிய பஞ்சாலை கழக தொழிற்சாலைகளைத் திறக்க வலியுறுத்தி, கோவை வந்த ஒன்றிய இணையமைச்சர் பபித்ரா மார்கரிட்டாவை கண்டித்து சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் தேசிய பஞ்சாலை கழகத்திற்குச் சொந்தமான 23 பஞ்சாலைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2020 -ம் ஆண்டிலிருந்து தேசிய பஞ்சாலை கழக நிர்வாகம் முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பஞ்சாலை தொழிலாளர் சங்கங்கள் பல முறை ஒன்றிய அரசிடம் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செயற்கை இழை கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக வந்த ஒன்றிய இணையமைச்சர் பபித்ரா மார்கரிட்டாவை கண்டித்து சி.ஐ.டி.யு, எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 8 தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஒன்றிய அரசைக் கண்டித்தும், உடனடியாக மூடப்பட்ட பஞ்சாலைகளைத் திறக்க வலியுறுத்தி கோசம் எழுப்பினர். இதையடுத்து தகவலறிந்த இணையமைச்சர் பபித்ரா தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசினார்.
இது குறித்துப் பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.பத்பநாதன் கூறும் போது:
கடந்த 2020 -ல் இருந்து கோவையில் செயல்பட்டு வந்த 7 பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இந்த ஆலைகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்பட வேண்டும், மேலும் ஓராண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ள தொழிலாளர்களின் ஊதியங்களை வழங்க வேண்டும்,
இ.எஸ்.ஐ , வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளைத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். இது குறித்து கோவை வந்த ஒன்றிய இணையமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இந்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து, ஒன்றிய அமைச்சருடன் பேசிய உரியத் தீர்வு காண்பதாகக் கூறியுள்ளார், தொழிலாளர்கள் நாங்களும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் எனக் கூறினார்.