சென்னை இளைஞரின் வங்கி கணக்கை பயன்படுத்தி ரூ.7 கோடி மோசடி செய்த கும்பல் – போலீசார் விசாரணை
சென்னையை சேர்ந்த இளைஞரின் வங்கி கணக்கில் ரூ.7 கோடிவரை பண பரிவர்த்தனை செய்த ஆன்லைன் மோசடி கும்பல் – கோவை சைபர் கிரைம் போலீஸார் விசாரணைக்கு பின் இளைஞரை விடுவித்தனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஸ்ணகுமார் (56). கடந்த ஆண்டு இவர் இணையத்தில் வந்த விளம்பரத்தை நம்பி ஆன்லைன் வர்த்தக செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
மேலும் பல்வேறு தவணைகளாக அதில் தனது சேமிப்பு தொகையான ரூ.1.14 கோடி முதலீடு செய்துள்ளார். பிறகு தான் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கிருஸ்ணகுமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிருஸ்ணகுமார் வங்கி கணக்கிலிருந்து இப்பணம் யாருடைய வங்கி கணக்கிற்கு சென்றது என்பது குறித்து போலீஸார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், அப்பணம் சென்னை ராயபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் (34) என்பவரது வங்கி கணக்கிற்குச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை சென்ற சைபர் கிரைம் போலீஸார் ராஜ்குமாரை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது பெயரில் செயல்பட்ட வங்கி கணக்குகுறித்து அவருக்கு ஏதும் தெரியாமல் இருந்தது தெரியவந்தது.
மேலும் அவரது பெயரில் உள்ள வங்கி கணக்கில் மட்டும் ஆன்லைன் மோசடி கும்பல் சுமார் ரூ.7 கோடிவரை பணம் பரிவர்த்தனை நடைபெற்றது, குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ராஜ்குமாரிடம் போலீஸார் நடத்திய விசாரணை நிறைவடைந்ததை அடுத்து அவரை விடுத்தனர்.