கோவையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு.
கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, மரக்கன்றுகளை நடவு செய்யாத தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காகக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை அகற்றியது.
மேலும் இதற்கு மாற்றாகப் பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி 10 மடங்கு மரக்கன்றுகளை நடவு செய்வதாகத் தெரிவித்தது. இருப்பினும் கடந்த 7 ஆண்டுகளுக்குப் பின் தற்போது வரை தேசிய நெடுஞ்சாலைத் துறை 5 சதவீதம் மரக்கன்றுகளை கூட நடவு செய்யவில்லையெனக் குற்றம் சாட்டி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில் கடந்த 7 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நடவு செய்யாமல் அலட்சியம் காட்டி வரும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன்: நெடுஞ்சாலைகளில் வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் எனப் பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட சுமார் 2 ஆயிரம் மரங்களுக்கு மாற்றாக 25 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டிய நிலையில் அதனை நெடுஞ்சாலை துறை செய்யவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது 10 ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதாக நெடுஞ்சாலைத் துறை தெரிவித்தது. ஆனால் 2 ஊராட்சிகளில் மட்டும் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டிய இடத்தில் வெரும் 50 மரக்கன்றுகள் கூட நடவு செய்யவில்லை.
சாலை விரிவாகத்திற்கு மரம் வெட்டுவது தவிர்க்க முடியாது என்றாலும், அதற்கு மாற்றாக மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் ஆனால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதில் மெத்தனமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
5 சதவீதம் கூட மரக்கன்றுகளை நடவு செய்யாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.